கரூர் மாவட்டத்தில், பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்துகேட்பு
கரூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
கரூர்,
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளில், மாணவ-மாணவிகள் சேர்க்கை நடத்தப்பட்டது. அதேநேரம் பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் விரும்பிய உயர்கல்வியை பெறுவதற்கு, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது அவசியம்.
எனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோரின் கருத்துகளை கேட்கும்படி அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரை அழைத்து கருத்து கேட்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 214 அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் நேற்று பெற்றோர்களை அழைத்து கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும் அதன் தலைமை ஆசிரியர்கள் இந்த கூட்டத்தை நடத்தினார்கள். இதில் பங்கேற்பதற்காக வந்த பெற்றோர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் முதலில்உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் அவர்களுக்கு கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது. அவர்கள் கை கழுவிக் கொண்ட பின்னர் சமூக இடைவெளியை பின்பற்றி பெஞ்சுகளில் அமர வைக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டது. அந்த படிவத்தில் மாணவரின் பெயர், பயிலும் வகுப்பு, பாடப்பிரிவு, பெற்றோரின் பெயர், ஊர், செல்போன் எண் ஆகியவற்றை நிரப்பும் படி கேட்கப்பட்டிருந்தன. மேலும் 16-ந் தேதி முதல் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளை திறக்க சம்மதம், இல்லை என இரண்டு கட்டங்கள் குறிப்பிடப்பட்டு அவற்றில் ‘டிக்‘ செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. சம்மதம் இல்லை என்றால் அதற்கான காரணத்தை எழுதுவதற்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அப்போது, கூட்டத்தில் சில பெற்றோர்கள் கூறுகையில், மழைக்காலம் என்பதால் கொரோனா பரவிவிடும் வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி வந்ததும் பள்ளிகளை திறக்கலாம் என்று சிலர் கூறினர். ஆனால் சில பெற்றோர்கள் மாணவர்களின், உரிய பாதுகாப்பு மற்றும் சுழற்சி முறையில் வகுப்பு நடத்துவது உள்ளிட்ட நடைமுறைகளுடன் பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.