7 மாதங்களாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்கள் இன்று திறப்பு ரசிகர்கள் உற்சாகம்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதங்களாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-11-09 23:06 GMT
நெல்லை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு ஊரடங்கில் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளைமட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக தியேட்டர்களை திறப்பதற்கான ஆயத்த பணிகள்தீவிரமாக நடந்து வந்தது.

கிருமிநாசினி தெளிப்பு

அரசு கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. இருக்கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் கைகளை சுத்தம் செய்த பிறகு தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவர். 7 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

இதுகுறித்து நெல்லையை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறும்போது ‘அரசு அறிவித்தபடி இன்று தியேட்டர்கள் திறக்கப்படும். அரசு அறிவித்த விதிமுறைகள் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருசில தியேட்டர்களுக்கு நல்ல படங்கள் கிடைக்கவில்லை. இருந்தாலும் அரசு அறிவித்தபடி நாங்கள் தியேட்டரை திறக்க முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

மேலும் செய்திகள்