கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க வலியுறுத்தி திருவாரூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க வலியுறுத்தி திருவாரூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் அனிபா, சங்க தலைவர் சசிகுமார், பொருளாளர்கள் மணிமதி, ஜெயசுதா, துணை செயலாளர் முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு அறிவித்தபடி கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் உயிரிழந்த ஒப்பந்த ஊழியர் பக்கிரிசாமி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும். 55 தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள இ.பி.எப். தொகையை உடனே வழங்க வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, இதர படிகள், வார விடுமுறை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.