செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கு அறங்காவலர்கள் நியமனம் தமிழக அரசு உத்தரவு

செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-11-09 21:42 GMT
சென்னை, 

வன்னியகுல ஷத்திரிய சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் பொது அறக்கட்டளையை பாதுகாக்கவும், பராமரிக்கவும் தமிழ்நாடு வன்னியகுல ஷத்திரிய பொது அறக்கட்ளை (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம்-2018 உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் பி.டி. லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தொடர்பான வழக்கில் கடந்த 5-ந்தேதியன்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதில், அறக்கட்டளையின் நிர்வாகத்தில் காலியிடங்கள் இருக்க கூடாது. அந்த இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்களை வரவேற்று, விண்ணப்பதாரர்களை வைத்து அறங்காவலர் குழுவை அரசு அமைக்க வேண்டும். அறக்கட்டளையின் நோக்கத்தை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அந்த அறங்காவலர் குழுவின் தலைவராக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள்

வன்னியகுல ஷத்திரிய பொது அறக்கட்டளையின் 64-ம் பிரிவில், கோர்ட்டு அளிக்கும் உத்தரவுகளை அறங்காவலர் குழுவுடன் ஆலோசித்து நிறைவேற்ற அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. வன்னியகுல ஷத்திரிய அறக்கட்டளையின் அறங்காவலர் பதவிக்காக 203 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசிடம் அந்த விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட்டன.

அந்த விண்ணப்பதாரர்களில், அறக்கட்டளையை நிறுவியவரின் குடும்பத்தினர் 3 பேர், வக்கீல்கள்-36, பொறியாளர்கள்-21, மருத்துவர்கள்-8, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்-24, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்-2, கல்விப் பணியில் உள்ளவர்-42, பொதுப் பிரிவினர்-67 என 203 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்திருந்தன.

3 ஆண்டுகள் பதவி

அந்த விண்ணப்பங்களை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதில், தகுதி, அனுபவம் உள்ளவர்களைக் கண்டறிந்து 9 பேரை பி.டி. லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் அறங்காவலர்களாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 3 ஆண்டுகளுக்கு அந்த பொறுப்பில் இருப்பார்கள்.

அதன்படி, அறங்காவலர் குழுவின் தலைவராக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் இருப்பார். எல்.அருள் (குடும்ப உறுப்பினர்), வக்கீல் வி.சுகேந்திரன், டாக்டர் சி.வேணி, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கே.ராமலிங்கம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சுந்தரமூர்த்தி, கல்விப்பணியில் உள்ள என்.வீரப்பன் மற்றும் பொது பிரிவினராக டி.குபேந்திரகுணபாலன், எம்.ராஜேந்திரன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்