புதுவையில் சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் தந்தை, மகன் உள்பட 6 பேர் கைது

புதுவையில் கொத்தடிமைகளாக பயன்படுத்தியதுடன் சிறுமிகளை அடைத்து வைத்து கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தை, மகன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-11-09 21:21 GMT
புதுச்சேரி, 

புதுவை வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது53). இவர் கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணையை கவனித்துக் கொள்ளவும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்ட வேலைகளுக்கு அனுப்பவும் ஆட்களை வைத்து இருந்தார். இதற்காக வெளியூர்களில் குடும்பம் நடத்தவே கஷ்டப்படுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பணம் கொடுத்து சிறுமிகள் உள்பட பலரை கொத்தடிமையாக அழைத்து வந்து இதுபோன்ற வேலைகளில் கன்னியப்பன் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இவர்களில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்த சிறுமிகளும் அடங்குவார்கள். இவர்களை கோர்க்காடு பகுதியில் மட்டுமல்லாது வானூர், திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு, திண்டிவனம் உள்ளிட்ட சுற்றுப்புற ஊர்களுக்கு வாத்து மேய்ப்பதற்காக கன்னியப்பன் அனுப்பியுள்ளார். தமிழக பகுதியில் தொடர்ந்து சிறுமிகள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததை பார்த்து சந்தேகமடைந்த சிலர் இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பாலியல் தொல்லை

அதன்படி புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் குழுவினர் விரைந்து செயல்பட்டு அந்த சிறுமிகளை மீட்டு காப்பகத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து விசாரித்ததில், அவர்களைப் போல் மேலும் சிறுமிகளை வில்லியனூர் அருகே உள்ள கோர்க் காட்டில் வீட்டில் அடைத்து வைத்து பண்ணை தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தைகள் காப்பக நிர்வாகிகள் வில்லியனூரை அடுத்த கோர்க்காடுக்கு சென்று சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது குறித்து ரகசியமாக விசாரித்தனர். இதில் அந்த சிறுமிகள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசாரின் உதவியுடன் சென்று அந்த சிறுமிகளை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டனர்.

போதை பொருட்கள் கொடுத்து கூட்டு பலாத்காரம்

இதையடுத்து அந்த சிறுமிகளை அங்கிருந்து புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில் ரூ.3 ஆயிரத்தை பெற்றோரிடம் கொடுத்து தங்களை கொத்தடிமைகளாக வாத்து மேய்க்க வைத்து இருந்ததாகவும், பண்ணையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

பண்ணையில் உள்ள அறையில் தள்ளி தங்களை பூட்டி வைத்து விடுவதோடு வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை. சாப்பாடு மட்டும் கொடுக்கப்படும். அந்த சிறுமிகளுக்கு கன்னியப்பன் உள்பட பலர் கஞ்சா, மது, போதை பொருட்களை கொடுத்து தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இதுதவிர சினிமா படங்களில் வருவது போல் சிறுமிகளை கட்டி வைத்து சிறுவர்கள் உள்பட பலர் கூட்டாக பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது. எதுவுமே தெரியாத அந்த சிறுமிகள் நீண்ட நாட்களாக இப்படி கொடுமையில் சிக்கித் தவித்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் உடல் மற்றும் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த சிறுமிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.

கர்ப்பமான சிறுமி

இந்த சிறுமிகளில் ஒருவர் கர்ப்பமாக இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த சிறுமிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதன் முடிவில் 5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுகுறித்து மங்கலம் போலீசில் குழந்தைகள் நலக்குழுவினர் புகார் தெரிவித்தனர். அதன்படி மேற்கு போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மேற்பார்வையில் சிறப்பு விசாரணை அதிகாரியாக பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமிகள் அடையாளம் காட்டியதன்படி முதல் கட்டமாக சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

6 பேர் கைது

சிறுமிகளை சீரழித்ததாக கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் (53), அவரது மகன் ராஜ்குமார் (27), உறவினர் பசுபதி, அய்யனார் (23), வானூர் வேட்டைக்காரர் களான சிவா, மூர்த்தி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் கன்னியப்பனுக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 5 பேரையும் பரிசோதனை முடிவு கிடைத்த பிறகு சிறையில் அடைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சிறுமிகளை கொத்தடிமைகளாக வேலைக்கு பயன்படுத்தியதுடன் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்து இருப்பதும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக மேலும் பலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்