ஆர்.ஆர்.நகர், சிராவில் இன்று ஓட்டு எண்ணிக்கை 2 தொகுதிகளில் 144 தடை உத்தரவு அமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

Update: 2020-11-09 20:27 GMT
பெங்களூரு, 

ஆர்.ஆர்.நகரில் ஆளும் பா.ஜனதா சார்பில் முனிரத்னா, காங்கிரஸ் சார்பில் குசுமா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 16 பேரும், சிராவில் பா.ஜனதா சார்பில் ராஜேஸ்கவுடா, காங்கிரஸ் சார்பில் டி.பி.ஜெயச்சந்திரா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் அம்மாஜம்மா ஆகியோர் உள்பட 15 பேரும் என மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் ஆர்.ஆர்.நகரில் 45.24 சதவீதமும், சிராவில் 84.55 சதவீதம் வாக்குகள் என சராசரியாக 64 சதவீத வாக்குகள் பதிவாயின. கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் வைரஸ் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டன. அந்த 2 தொகுதிகளிலும் காரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் வாக்குகளை பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகள் சிறப்பு வசதியை ஏற்படுத்தி கொடுத்தனர்.

இன்றுஓட்டு எண்ணிக்கை

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. பகல் 12 மணிக்குள் முடிவு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் இரு தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. இதில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அது கர்நாடக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது. ஆயினும் இது ஆளும் பா.ஜனதாவுக்கு ஒரு கவுரவ பிரச்சினை ஆகும். ஏனென்றால் ஒரு தொகுதியில் தோற்றால் கூட, அது ஆளும் பா.ஜனதா அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பது வெளிப்படும் என்று எதிர்க்கட்சிகள் குறை கூறக்கூடும். இடைத்தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் தீவிரமாக முயற்சியை மேற்கொண்டன. இதனால் அந்த கட்சிகள் வெற்றியை எதிர்நோக்கியுள்ளன.

144 தடை உத்தரவு

ஆர்.ஆர்.நகர் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் முன் எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பள்ளியை சுற்றி ஒரு துணை போலீஸ் கமிஷனர் உள்பட 592 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஒட்டு மொத்தமாக ஆர்.ஆர்.நகர் தொகுதியில் 3 துணை போலீஸ் கமிஷனர்கள், 8 உதவி போலீஸ் கமிஷனர்கள், 21 இன்ஸ்பெக்டர்கள், 57 சப்-இன்ஸ்பெக்டர்கள், 103 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 1,068 போலீஸ்காரர்கள் உள்பட 1,670 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இதுதவிர 9 பிளட்டூன் நகர ஆயுதப்படை போலீசார், 9 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை போலீசார், ஒரு கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 164 ரோந்து வாகனங்கள் ஆர்.ஆர்.நகர் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும். மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மதுபானங்கள் விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிராவில்24 சுற்றுகள்

சிரா தொகுதி வாக்குகளை எண்ண செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து துமகூரு மாவட்ட கலெக்டர் ராகேஷ்குமார் துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

துமகூருவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிரா தொகுதி வாக்குகள் நாளை (இன்று) எண்ணப்படுகின்றன. சரியாக காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை பணிகள் தொடங்குகின்றன. 8.30 மணியில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள ஓட்டுகள் எண்ணுவது தொடங்கப்படும். அதற்கு முன்பு 7.30 மணிக்கு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை அனைத்து அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்படும். ஓட்டு எண்ணிக்கைக்கு 14 மேசைகள் போடப்பட்டுள்ளன. ஒரு மேசைக்கு ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தபால் ஓட்டுகளை எண்ண தனி அறையில் 4 மேசைகள் போடப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை மொத்தம் 24 சுற்றுகள் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை பார்க்க ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் அனுமதிக்கப்படுவார். சிரா தொகுதியிலும், துமகூருவில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தின் 500 மீட்டர் சுற்றளவில் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் இன்று காலை 6 மணி முதல் நாளை (புதன்கிழமை) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. அதே போல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தின் 5 கிலோ மீட்டர் சுற்றளவிலும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இவ்வாறு ராகேஷ்குமார் கூறினார்.

மேல்-சபைஓட்டு எண்ணிக்கை

அதே போல் கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 4 ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலிலும் 3 அரசியல் கட்சிகளுமே தீவிரமாக போட்டி போட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் இன்று ஒரு நாள் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்