வருகிற 17-ந் தேதி கல்லூரிகள் திறப்பு: வழிகாட்டுதலை வெளியிட்டது கர்நாடக அரசு
வருகிற 17-ந் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் உணவு, குடிநீரை வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் என்று கூறி கர்நாடக அரசு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்-லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகத்தில் நடப்பு கல்வி ஆண்டின் தொடக்கமாக வருகிற 17-ந் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும். கற்பித்தல், செய்முறை போன்ற வகுப்புகள் “ஷிப்ட்“ முறையில் நடத்த வேண்டும். கல்லூரிகளுக்கு நேரடியாக வர விருப்பம் இல்லாத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக கற்பித்தலை தொடர வேண்டும். வகுப்பறைகள், கழிவறைகள், இதர பிற அறைகளை சானிடைசர் கொண்டு தூய்மையாக்க வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவு அறிக்கையை உடன் கொண்டு வர வேண்டும். வைரஸ் தொற்று இல்லாதவர்கள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தெர்மல் ஸ்கேனர்
மாணவர்கள் உணவு மற்றும் குடிநீரை வீட்டில் இருந்தே கொண்டு வர வேண்டும். அதை அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் முகக்கவசம், முகத்தை முழுமையாக மூடும் கண்ணாடி கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். கல்லூரிகளில் நூலகம், கேன்டீன்களை திறக்கக்கூடாது. கலாசார நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. நுழைவு வாயிலில் மாணவர்களை தெர்மல் ஸ்கேனர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கல்லூரி வளாகத்தில் எச்சில் துப்பக்கூடாது. காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினை இருப்பவர்களை கல்லூரிக்குள் வர அனுமதி இல்லை. கல்லூரிகளில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.