‘அடிக்கடி போனில் பேசியதால் மனைவியை கொலை செய்தேன்’ கைதான தையல் தொழிலாளி வாக்குமூலம்

அடிக்கடி போனில் பேசியதால் மனைவியை கொலை செய்தேன் என கைதான தையல் தொழிலாளி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Update: 2020-11-09 05:14 GMT
கல்லாவி,

கல்லாவி அருகே பள்ள சூளகரையை சேர்ந்தவர் தங்கராஜ் (36). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி ருக்குமணி (30). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ருக்குமணி போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ருக்குமணி தலையில் கல்லைப்போட்டு அவருடைய கணவர் தங்கராஜ் கொலை செய்தார்.

பின்னர் தங்கராஜ் கல்லாவி போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது மனைவி அடிக்கடி போனில் பேசி வந்தார். அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் இருந்த நான் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்