சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் இருமுடி செலுத்தலாம் - தலைமை குருசாமி தகவல்

சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் இருமுடி செலுத்தலாம் என்று தலைமை குருசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-09 04:57 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இணையாக அதே தோற்றத்தில் ரெகுநாதபுரத்தில் பிரமாண்டமாக ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோவில் அமைக்கப்பட்டது. சபரிமலையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் இங்கும் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த கோவிலுக்கு ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லபல்வேறு கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்து உள்ளது. இதனால் சபரிமலை அய்யப்பன் கோவில் தோற்றத்தில் அமைந்துள்ள ரெகுநாதபுரம் அய்யப்பன் கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவில் தலைமை குருசாமி கூவயதாவது:- கொரோனா காரணமாக இந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு 10 வயதிற்கு உட்பட்டவர்களும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் கோவிலுக்கு வரவேண்டாம், நாள் ஒன்றுக்கு 1000 நபர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

இந்த நிபந்தனைகளின்படி சபரிமலை யாத்திரை செல்ல முடியாத பக்தர்கள் இந்த ஆண்டு ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலுக்கு முறையாக விரதம் இருந்து வரும் பக்தர்களின் இருமுடியை சபரிமலையில் காணிக்கை செலுத்துவதுபோல் ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலிலும் இருமுடி செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சிறுவழி பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இருமுடிகட்டுடன் சுமார் 5 கி.மீ.தூரம் பாதயாத்திரையாகவும், பெருவழி பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இருமுடிக்கட்டுடன் சுமார் 48 கி.மீ.தூரம் பாதயாத்திரையாகவும் தாங்கள் விரும்பும் இடத்தில் இருந்து வரலாம். தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையின்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்