தி.மு.க. ஆட்சி, தமிழகத்தை முன்னேற்றும் ஆட்சியாக அமையும் - நீலகிரி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. ஆட்சி, தமிழகத்தை முன்னேற்றும் ஆட்சியாக அமையும் என்று நீலகிரி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில், ‘தமிழகம் மீட்போம்’ - 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காணொலிக்காட்சி வழியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் முதல் 5 ஆண்டு காலம் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள மக்களை மறந்தார் ஜெயலலிதா. அடுத்த 5 ஆண்டு காலம் தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள மக்களை மறந்தார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் 10 ஆண்டு காலத்தில் தமிழகம் பெரும் பாதாளத்துக்கு தள்ளப்பட்டது.இந்த பாதாளத்தில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான போர்தான் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தல். ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு தேயிலை தோட்டத்தில் உள்ள பங்களாவில் நடைபெற்ற கொலை - கொள்ளை சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என்ன என்றால், ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளை நடந்தது, கொலையும் நடந்தது, மர்ம விபத்துக்கள் நடந்தது என்பதுதான்.
இந்த கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன்பு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த ஆட்சி எத்தகைய சந்தேகத்துக்குரிய மனிதர்களின் கையில் சிக்கி இருக்கிறது என்பது இதில் இருந்து தெரியவில்லையா? ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடிக்க துணிந்தவர்களை தண்டிக்க வேண்டாமா?
கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், சுற்றுச்சூழல், சமூகநீதி, வளர்ச்சி திட்டங்கள், புதிய நிறுவனங்கள், தொழில், ஏற்றுமதி இறக்குமதி, தமிழ் மேம்பாடு எல்லாவற்றிலும் தமிழகம் பின்தங்கிவிட்டது. பின்தங்கி விட்டது என்பது கூட சாதாரண வார்த்தை. அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது. இதனை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வரவேண்டும். அதுதான் எனது ஒரே லட்சியம்.
ஒரு மாநிலம், சுயாட்சி பெற்ற மாநிலமாக அமைந்தால் மட்டுமே தனது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றிவிட முடியும் என்று அண்ணா கனவு கண்டார். இன்றைய தமிழகம் சுயாட்சி பெற்ற மாநிலமாகவும் இல்லை. சுயாட்சியை விரும்புகிறவர் கையில் அதிகாரமும் இல்லை.
கடல் கடந்து சென்று தமிழனின் பெருமையை நிலைநாட்டினார்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்கள். இன்று கடல் கடந்து செல்லும் செய்திகள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. இந்த அவமானத்தை தடுத்து நிறுத்தும் போர் தான், வருகின்ற சட்டமன்ற தேர்தல்.
நம்மால் இது முடியும். இந்த கொள்ளை கூட்டத்தை விரட்டுவது மட்டுமல்ல, அந்த இடத்தில் அமர்ந்து நல்லாட்சியை தர தி.மு.க.வால் மட்டுமே முடியும். தி.மு.க. ஆட்சி என்பது தமிழகத்தை முன்னேற்றும் ஆட்சியாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.