நகைகளை மீட்க சென்றபோது போலீஸ் ஏட்டை தாக்கிவிட்டு தப்ப முயற்சி: வாலிபர், துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு - துமகூரு அருகே சம்பவம்
துமகூரு அருகே, பதுக்கி வைத்திருந்த நகைகளை மீட்க சென்ற போது போலீஸ் ஏட்டுவை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற வாலிபரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்து உள்ளது.
துமகூரு,
துமகூரு அருகே கியாத்தசந்திரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டப்பட்டு இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்தும், இரவில் தனியாக நடந்து செல்பவர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டியும் ஒரு கும்பல் தங்கநகைகள், பணத்தை கொள்ளையடித்து வந்தது.
இந்த சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க கியாத்தசந்திரா குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மநபர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்கு தொடர்பாக ரோகித் (வயது 30) என்பவரை கியாத்தசந்திரா போலீசார் கைது செய்து இருந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையின் போது வீடுகளில் திருடிய நகைகளை துமகூரு அருகே மாரநாயக்கனபாளையா பகுதியில் குழிதோண்டி பதுக்கி வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் நகைகளை மீட்பதற்காக நேற்று காலை ரோகித்தை, மாரநாயக்கனபாளையாவுக்கு கியாத்தசந்திரா போலீசார் அழைத்து சென்று இருந்தனர்.
மேலும் மண்ணில் புதைத்து வைத்திருந்த நகைகளை போலீசார் மீட்டு கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து அங்கு நின்று கொண்டு இருந்த போலீஸ் ஏட்டு ஹனுமந்தராயாவை, ரோகித் தாக்கிவிட்டு தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் முனிராஜ், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடைந்துவிடும்படி எச்சரிக்கை விடுத்தார். ஆனால் ரோகித் அதனை பொருட்படுத்தாமல் தப்பி சென்றார். இதனால் ரோகித்தை நோக்கி, இன்ஸ்பெக்டர் முனிராஜ் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். பின்னர் ரோகித்தை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து ரோகித்தை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தாக்கியதில் கையில் காயம் அடைந்த ஏட்டு ஹனுமந்தராயா துமகூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கியாத்தசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வாலிபரை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் துமகூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.