ஹாவேரி அருகே, பெண்ணை கற்பழித்து கொன்ற உறவுக்கார வாலிபர் கைது

ஹாவேரி அருகே, பெண்ணை கற்பழித்து கொன்ற உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-11-08 22:15 GMT
ஹாவேரி,

ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா அடூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்டது மகரவள்ளி கிராமம். இந்த கிராமத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த அடூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா சிருதோனி கிராமத்தை சேர்ந்த 48 வயது பெண் என்பதும், அவரை யாரோ மர்மநபர்கள் கொலை செய்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதனால் பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணும், மகரவள்ளி கிராமத்தில் வசித்து வரும் எல்லப்பா (வயது 26) என்பவரும், உறவினர்கள் என்று போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் எல்லப்பாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், எல்லப்பாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலையான பெண் மகரவள்ளி கிராமத்திற்கு வந்து இருந்ததும், பின்னர் அவர் ஊருக்கு செல்ல பஸ் ஏற்றி விடுவதற்காக எல்லப்பா மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும், ஆனால் பெண்ணை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று எல்லப்பா வலுக்கட்டாயமாக கற்பழித்ததும் தெரியவந்தது. மேலும் உயிருடன் விட்டால் தன்னை போலீசில் காட்டி கொடுத்து விடுவார் என்ற பயத்தில் பெண்ணை, கழுத்தை நெரித்து எல்லப்பா கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து எல்லப்பாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்