மாவட்டத்தில் பரவலாக மழை: ஆறுமுகநேரியில் உப்பு உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆறுமுகநேரியில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியதால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Update: 2020-11-08 22:45 GMT
தூத்துக்குடி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று அதிகாலையில் திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. நேற்று காலை முதல் கடும் வெயில் மக்களை வாட்டியது. மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

ஆறுமுகநேரி கன்னக்காடு, தோணித்துறை, பஞ்சம்தாங்கி பகுதிகளில் ஏராளமான உப்பளங்கள் உள்ளன. இந்த பகுதியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதிக்குள் உப்பு உற்பத்தி முடிவடைவது வழக்கம். இந்த ஆண்டு மழை பிந்தியதால், நவம்பர் மாதம் 7-ந் தேதி வரை உப்பு உற்பத்தி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த பெய்த மழை பெய்தது. விடிய விடிய மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக உப்பளங்களில் குளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி சீசனும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் தாங்கள் ஏற்கனவே உற்பத்திசெய்த உப்பை பாதுகாப்பாக குவித்து வைத்துள்ளனர்.இனி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில்தான் உப்பு உற்பத்தி தொடங்கும்.

நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை திருச்செந்தூரில் 6 மில்லி மீட்டர் மழையும், காயல்பட்டினத்தில் 40 மில்லிமீட்டர், குலசேகரன்பட்டினம் 4, விளாத்திகுளம் 1, வைப்பார் 7, கயத்தாறு 11, கடம்பூர் 15, எட்டயபுரம் 1, சாத்தான்குளம் 17.4, ஸ்ரீவைகுண்டம் 0.3 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

மெஞ்ஞானபுரம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள அடைக்கலாபுரத்திலிருந்து வேப்பங்காடு செல்லும் சாலையோரமுள்ள மரம் ஒன்று பலத்த காற்றுக்கு, சாலையின் குறுக்கே சரிந்து விழுந்தது. அப்போது பொதுமக்கள் யாரும் அந்த வழியில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மரத்தின் கிளைகள் மின்வயர்கள் மீது விழுந்ததால் 3 மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்ததும் நங்கைமொழி பஞ்சாயத்து தலைவர் விஜயராஜ் ஏற்பாட்டில் சாலையின் குறுக்கே பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறாக சரிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்