ஏர்வாடியில் பரிதாபம்: காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

ஏர்வாடியில் காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-11-08 22:30 GMT
ஏர்வாடி, 

நெல்லை மாவட்டம் ஏர்வாடி கோவில் வாசல் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். கட்டிட தொழிலாளி. இவரது மகள் அசுவதி என்ற ஐஸ்வர்யா (வயது 18). இவர் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் டிரைவர் அய்யப்பன் (22).

ஐஸ்வர்யா, அய்யப்பன் பக்கத்து பக்கத்து வீடு என்பதால் 2 பேரும் முதலில் நட்பாக பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இவர்கள் 2 பேரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் சமீபத்தில் இருவீட்டிற்கும் தெரியவந்தது. பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

வீட்டில் காதல் விஷயம் தெரிந்ததால் திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார்கள் என்று கருதிய ஐஸ்வர்யா தனது காதலன் அய்யப்பனிடம் போலீசில் தஞ்சம் அடைந்து, திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அய்யப்பன் மறுப்பு தெரிவித்தார். காதலன் திருமணத்திற்கு சம்மதிக்காததால் ஐஸ்வர்யா மனவேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் ஐஸ்வர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து உடனடியாக ஏர்வாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டில் ஐஸ்வர்யா தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில், ‘தனது தற்கொலைக்கு காரணம் காதலன் அய்யப்பன் தான்‘ என்று எழுதி வைத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏர்வாடியில் காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்