கோத்தகிரி பகுதியில் காபி விளைச்சல் அதிகரிப்பு

கோத்தகிரி பகுதியில் காபி விளைச்சல் அதிகரித்துள்ளது.

Update: 2020-11-08 16:14 GMT
கோத்தகிரி, 

நீலகிரி மாவட்டத்தில் குறுமிளகு, காபி, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைகிறது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 8,330 ஹெக்டேர் பரப்பளவில் காபி சாகுபடி செய்யப்பட்டது. அராபிக்கா, ரொபஸ்டா என 2 வகையான காபி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கோத்தகிரி பகுதியில் குஞ்சப்பனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆதிவாசி பழங்குடியின மக்கள் தங்கள் தோட்டங்களில் தேயிலை, காபி, குறுமிளகு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

மே மாதம் பெய்யும் கோடை மழையை தொடர்ந்து காபி செடிகள் பூக்க தொடங்குகிறது. பின்னர் நீலகிரி மாவட்டத்தில் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்குகிறது.

இந்த காலக்கட்டத்தில் செடிகளில் காபி காய்கள் விளைகிறது. டிசம்பர் மாதம் காபி காய்கள் பழுக்க தொடங்கும். அதன்பின்னர் டிசம்பர் மாத கடைசியிலும் ஜனவரி மாதத்திலும் காபி பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது.

விளைச்சல் அதிகரிப்பு

இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை, கீழ் தட்டப்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பயிரிடப்பட்டுள்ள காபி செடிகளில் தற்போது காபி காய்கள் காய்த்துள்ளது. இந்த காபி காய்கள் வரும் டிசம்பர் மாத இறுதி மற்றும் ஜனவரி மாதங்களில் நன்கு பழுத்து அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தற்போது காபி விளைச்சல் அதிகரித்துள்ளதால் அவற்றை பயிரிட்டுள்ள பழங்குடியின விவசாயிகளுக்கு, இந்த ஆண்டு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. செடியில் இருந்து அறுவடை செய்யப்படும் காபி பழங்கள் கோடைகாலத்தில் நன்கு காய வைக்கப்பட்டு அவை அரசு காபி வாரியம் மற்றும் தனியார்களுக்கு நல்ல கொள்முதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் சாகுபடி செய்து வரும் குறுமிளகு கிலோ ஒன்றுக்கு ரூ.400 வரையும், காபி கொட்டைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.165 வரையும் கொள்முதல் செய்யப்பட்டு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் காபி கொட்டை கொள்முதல் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்