‘தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மும்முனை மின்சாரம் ரத்து செய்யப்படாது’ அமைச்சர் தங்கமணி பேட்டி
‘தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மும்முனை மின்சாரம் ரத்து செய்யப்படாது’ என அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றுப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு வீட்டுமனை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு 338 பயனாளிகளுக்கு வீட்டுமனை ஆணையை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் 338 பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வெப்படை, அப்பநாயக்கன்பாளையம் பகுதிகளில் 460 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாத இறுதிக்குள் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும்.
மானநஷ்ட வழக்கு
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் மருத்துவக்கல்லூரி கட்டிடம் இரவே இடிந்தது போலவும், அதில் அடிபட்டவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி செல்லப்பட்டது போலவும் போலியாக பொய் பிரசாரம் செய்து வருகிறார். அதை அவர் நிரூபிக்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.
இதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவக்கல்லூரி கட்டிடம் இடிந்ததாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவர்களது ஆட்சி காலத்தில் கோவை அம்மன்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்தது. நாங்கள் சட்டசபையில் பிரச்சினையை எழுப்பிய பிறகு அங்குள்ள வீடுகள் இடிக்கப்பட்டன. தர்மபுரி மருத்துவக்கல்லூரியிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது.
நாங்கள் மக்களை பார்த்து கொண்டு இருக்கிறோம். அவர்கள் மக்களை பற்றி கவலைப்படாமல் விளம்பரத்தை தேடி வருகிறார்கள். யார் நல்லது செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதுபோன்ற பொய் பிரசாரங்களுக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை.
மும்முனை மின்சாரம்
இதேபோல் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், விவசாயத்திற்கான மும்முனை மின்சாரத்தின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பது, இலவச மின்சாரம் ரத்துக்கு முன்னோட்டம் என்பது போல கேள்வி எழுப்பி உள்ளார். அவர்களின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தது.
நாங்கள் காலை 6 மணி என்பதை 8.30 மணி என மாற்றி அமைத்து உள்ளோம். மத்திய அரசு சோலார் மின்சக்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதால், அதை பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைத்து உள்ளோம். இதை இலவச மின்சாரம் ரத்து செய்வதற்கான முன்னோட்டம் என துரைமுருகன் தவறாக தெரிவித்து உள்ளார். இது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மின்சாரம் பற்றிபேச தகுதி இல்லாதவர்கள். தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மும்முனை மின்சாரம் ரத்து செய்யப்படாது.
மின்வாரிய அதிகாரி பீகார் தேர்தல் பணிக்கு சென்று விட்டார். அவர் வந்த பிறகு மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும். மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கெடுக்கும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.