ஊத்தங்கரை அருகே நடத்தையில் சந்தேகம்: தலையில் கல்லைப்போட்டு மனைவி படுகொலை தையல் தொழிலாளி வெறிச்செயல்
ஊத்தங்கரை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்த தையல் தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார்.;
கல்லாவி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே உள்ள பள்ளசூளகரை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 36). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி ருக்குமணி (30). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ருக்குமணி போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த தங்கராஜ், அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்தார். அதே போல், நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் தூங்க சென்று விட்டனர்.
படுகொலை
நேற்று அதிகாலை 4 மணிக்கு மதுபோதையில் தங்கராஜ், வீட்டில் தூங்கி கொண்டிருந்த ருக்குமணியின் தலையில் கல்லை போட்டுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மனைவி இறந்து விட்டதை அறிந்த தங்கராஜ் கல்லாவி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
போலீசாரிடம், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ருக்குமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கராஜை கைது செய்தனர்.
கல்லாவி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கணவனே படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.