திருப்பதி மலைப்பாதையில் பேட்டரி பஸ்களை இயக்க ஏற்பாடு பழைய வாகனங்களுக்கு தடை
திருப்பதி மலைப்பாதையில் பேட்டரி பஸ்களை இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பழைய பஸ்களை இயக்க தடை விதிக்கப்பட உள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
திருமலை,
திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநில அரசு தினமும் 400-க்கும் மேற்பட்ட டீசல் பஸ்களை இயக்கி வருகிறது. அத்துடன், பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் திருமலைக்கு வருகின்றனர். இதனால், திருமலையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
நேற்று முதல் பேட்டரியில் இயங்கக்கூடிய பஸ் சேவை சோதனை ஓட்டம் தொடங்கியது. 2 மணிநேரம் பேட்டரி சார்ஜ் செய்தால் 49 பயணிகளுடன் 160 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில் பேட்டரி பஸ்கள் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பேட்டரி பஸ்சில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி ஏறி பயணித்து, ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பழைய வாகனங்களுக்கு தடை
திருப்பதியில் இருந்து திருமலைக்கு இயக்கப்படும் டீசல் பஸ்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. திருமலைக்கு இயக்கப்படும் டீசல் பஸ்களை படிப்படியாக குறைத்து, அதற்கு பதிலாக பேட்டரி பஸ்களை இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 10 ஆண்டுக்குமேல் உள்ள பழைய மோட்டார்சைக்கிள்கள், கார்கள், ஜீப்புகள், பஸ்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனமும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது.
திருப்பதி மலைப்பாதையில் செல்லும் எந்தவொரு வாகனமும் மற்றொரு வாகனத்தை முந்திச்செல்லக் கூடாது. ஹாரன் அடிக்கக்கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தேவஸ்தான நடவடிக்கைக்கு பக்தர்கள், வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டரி பஸ்கள் சோதனை ஓட்டத்தில் ஆந்திர அரசு போக்குவரத்துக்கழக திருப்பதி மண்டல அலுவலர் செங்கல்ரெட்டி உள்பட பலர் பங்கேற்றனர்.