திருப்புல்லாணியில் குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை கலெக்டர் ஆய்வு

திருப்புல்லாணி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2020-11-08 09:10 GMT
ராமநாதபுரம், 

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் மூலம் தேசிய அளவில் கிராம பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக திருப்புல்லாணி, மண்டபம், கமுதி, பரமக்குடி, போகலூர், நயினார்கோவில், ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் ஆகிய 8 யூனியன்களுக்கு உட்பட்ட 51 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு 159 குக்கிராமங்களில் குடியிருப்புகளுக்கு தனித்தனி குடிநீர் இணைப்பு குழாய் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.33 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட திருப்புல்லாணி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். திருப்புல்லாணி ஊராட்சிக்கு உட்பட்ட 2 குக்கிராமங்களில் மொத்தம் 605 குடியிருப்புகள் உள்ளன.

ஆய்வு

இந்த குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்ற அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ரமேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் பவுன்ராஜ், உதவி என்ஜினீயர்கள் ஜம்பு முத்துராமலிங்கம், ஆனந்தவல்லி, கீழக்கரை தாசில்தார் வீரராஜா உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்