திருச்சியில் பட்டப்பகலில் பயங்கரம்: வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை - 7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

திருச்சியில் பட்டப்பகலில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-11-08 06:24 GMT
திருச்சி,

திருச்சி தென்னூர் வாமடம் பகுதியை சேர்ந்த சப்பாணியின் மனைவி செல்வி. இவர்களது மகன்கள் அரவிந்த்(வயது 28), ராஜ்குமார்(25), விஜயன் என்கிற வாழைக்காய் விஜி(20), விக்னேஸ்வரன்(18). சப்பாணி ஏற்கனவே இறந்துவிட்டார்.அரவிந்த் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளனர். விஜயன் என்கிற வாழைக்காய் விஜி வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றி வந்தார். அவர் மீது வழிப்பறி, திருட்டு தொடர்பான சிறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் விஜயன் தனது வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களை பார்த்ததும் விஜயன் ஓட ஆரம்பித்தார்.

ஆனால் அந்த கும்பல் அவரை தப்ப விடாமல் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜயன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்து இறந்தார்.

இந்த சம்பவம் நடந்த போது விஜயனின் தாயார் செல்வி ஓடிவந்து தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவருக்கு கைகளில் லேசான காயம் ஏற்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் தென்னூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி, தில்லை நகர் இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரத்தவெள்ளத்தில் கிடந்த விஜயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வியையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கொலை செய்யப்பட்ட விஜயன் நேற்று முன்தினம் இரவு திருச்சி கோட்டை பகுதி கல்யாணசுந்தரம் நகருக்கு தனது நண்பர்களுடன் சென்றார். குடிபோதையில் அவர் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே கல்யாணசுந்தரம் நகரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரது தலைமையில் 7 பேர் வந்து விஜயனை கொலை செய்ததாக கூறப்படுகிறது. தில்லைநகர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் 7 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்