20 சதவீத தீபாவளி போனஸ் கேட்டு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் - மாவட்டத்தில் 7 இடங்களில் நடந்தது

20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கக்கோரி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் கடலூர் மாவட்டத்தில் 7 இடங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-08 05:21 GMT
கடலூர்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த நிலையில் கடலூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த ஆண்டு வழங்கியது போல் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை கடலூர் செம்மண்டலத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக குடோனுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் சந்திரபாலன், அன்புராஜ், சேகர், சதீஷ், சிலம்பரசன், ராமலிங்கம், தேவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கொரோனா காலத்திலும் ஓய்வின்றி பணியாற்றிய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கியது போல் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இந்த போராட்டம் நேற்று மாலை வரை நீடித்தது. அதன் பிறகு அவர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி விட்டு கலைந்து சென்றனர். இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்