சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம்: தொழிலதிபர், வியாபாரிகளிடம் ரவுடிகள் பணம் பறிப்பதற்கு அதிகாரிகள் உடந்தை - கடும் நடவடிக்கை எடுக்க நாராயணசாமி உத்தரவு

தொழிலதிபர், வியாபாரிகளிடம் ரவுடிகள் பணம் பறிப்பதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

Update: 2020-11-08 03:02 GMT
புதுச்சேரி,

சுற்றுலா துறைக்கு புதுவை மாநில அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மாநிலத்தில் தற்போது கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து பொதுமக்களும், பெண்களும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பீதியில் இருந்து வருவதாக அடுத்தடுத்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி.யை அழைத்து சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர உத்தரவிட்டார். அதன்பேரில் காலாப்பட்டு சிறையில் சோதனை நடத்தி கைதிகளின் அறைகளில் இருந்து 12 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இருப்பினும் புதுவை மாநிலத்தில் ரவுடிகளுக்கு சில அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் பக்கபலமாக இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதையொட்டி கோரிமேட்டில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது.

கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இதில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சிறையில் செல்போன் நடமாட்டத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும், பொதுமக்கள் அமைதியாக வாழவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்லவும் செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போலீஸ் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, உளவு பார்ப்பது, சமூக ஊடகத்தின் மூலம் ஏற்படும் தவறுகளை தடுப்பது, பணம் பறிப்பு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

புதுவையில் ரவுடிகள் சிறையில் இருந்தபடியே தங்கள் ஆதரவாளர்களுக்கு செல்போனில் பேசி அவர்கள் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். வியாபாரிகள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர். இதற்கு சில அதிகாரிகளே உடந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குற்ற நடவடிக்கைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் அதிகாரிகள் காலாப்பட்டு சிறையில் திடீர் சோதனை நடத்தி 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தற்போது சொத்து, வீடுகளை அபகரிப்பது குறைந்துள்ளது.

கொரோனா காலத்தில் போலீசார் ரோந்து பணியை குறைத்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ரவுடிகள் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே போலீசார் இனி வரும் காலங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பண்டிகை காலம். ரவுடிகள் சிலர் வியாபாரிகளையும், தொழிலதிபர்களையும் மிரட்டி மாமூல் கேட்டு வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளில் அரசு தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்