பழ வியாபாரி கொலையில் தலைமறைவான பெண் கைது

பழவியாபாரி கொலை வழக்கில் தலைமறைவான பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-11-08 02:56 GMT
புதுச்சேரி,

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த அய்யப்பன்(வயது 45) என்பவர் குடும்பத்தினருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். புதுச்சேரிக்கு வந்த அவர் தொழில் செய்ய நினைத்து மரக்காணத்தை சேர்ந்த செல்வி (47) என்பவரிடம் மொத்த விலைக்கு கொய்யாப் பழங்களை வாங்கி சில்லரை விலைக்கு விற்று வந்தார்.

இந்த நிலையில் செல்விக்கு கொய்யாப்பழங்கள் வாங்கியதற்கான பணத்தை தராமல் அய்யப்பன் தலைமறைவானார். இதனால் ஆத்திரமடைந்த செல்வி அவரை தேடி வந்தபோது கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதி சேதராப்பட்டில் ஒரு மதுக்கடை அருகே அய்யப்பன் நிற்பது தெரியவந்தது.

உடனே செல்வி, அவரது கணவர் பழனி, அரியாங்குப்பத்தை சேர்ந்த அரசு (40), முத்து (42) ஆகியோர் அங்கு சென்றனர். அய்யப்பனை பிடித்து பணத்தை கேட்டு 4 பேரும் சேர்ந்து அடித்து உதைத்தனர். இதில் கை, கால்கள் முறிந்ததையடுத்து அவரை ஒரு வேனில் கடத்தி வந்து புதுச்சேரி ஆம்பூர் சாலையில் கார்கள் நிறுத்தும் இடத்தில் வீசி விட்டுச் சென்றனர். மறுநாள் அய்யப்பன் இறந்து கிடந்தார்.

இது குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் முதலில் துப்பு துலங்காத நிலையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் அய்யப்பனை கொலை செய்து கொண்டு வந்து வீசியது தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு சேதராப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக சேதராப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விசாரித்து செல்வி, அவரது கணவர் பழனி, கூட்டாளிகளான அரசு, முத்து ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் செல்விக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மற்ற 3 பேரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த செல்வி மரக்காணத்தில் உள்ள வீட்டில் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். அப்போது அவர் அங்கிருந்து திடீரென தலைமறைவானார். அவரை சேதராப்பட்டு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவர் காட்ராம்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று செல்வியை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்