மருத்துவக் கல்லூரி மாணவி தேர்வு பயத்தால் தற்கொலை

இறுதி ஆண்டு தேர்வு பயத்தால் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2020-11-08 02:45 GMT
திருபுவனை,

சென்னை பெரம்பூர் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி வசந்தா. இவர்களுடைய மகள் சீசா வயது (22). திருபுவனை அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வந்தார். மதகடிப்பட்டு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனது தாயார் வசந்தாவுடன் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு சீசா தனது அறையில் தூங்கச் சென்றார். காலையில் நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த வசந்தா அறைக்கு சென்று பார்த்தபோது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு சீசா பிணமாக தொங்கியதை அறிந்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் அங்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரித்ததில், அதிகம் பாடங்களை படிக்க வேண்டி இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட தேர்வு பயத்தாலும் சீசா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் சீசா படித்து வந்த மருத்துவக்கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்