நாகர்கோவிலில் பயங்கரம்: வட்டி தொழில் செய்தவர் வெட்டிக்கொலை நகை- பணம் கொள்ளை; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
நாகர்கோவிலில் வட்டி தொழில் செய்து வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர கொலை பற்றிய விவரம் வருமாறு:-
நாகர்கோவில்,
நாகர்கோவிலை அடுத்த கீழச்சரக்கல்விளை பூங்கா தெருவைச் சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 58). திருமணம் ஆகாதவர். சுகுமாரன் கீழ சரக்கல்விளை பகுதியில் ஒரு வீட்டை ஒத்திக்கு எடுத்து தனியாக வசித்து வந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொழிலும் செய்து வந்தார்.
தினமும் காலை, மாலை நேரங்களில் ஸ்கூட்டரில் வட்டி பணம் வசூலிக்க சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினமும் அவர் வட்டி பணம் வசூலிக்க சென்றுள்ளார். இரவு 10 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்துள்ளார். அவருடன் சில வாலிபர்களும் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மதியம் ஒருவர், சுகுமாரனிடம் வட்டிக்கு பணம் வாங்குவதற்காக அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீடு திறந்து கிடந்துள்ளது. சுகுமாரன் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து வட்டிக்கு பணம் வாங்க வந்த நபர் அதிர்ச்சி அடைந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், துணை சூப்பிரண்டு வேணுகோபால், கோட்டார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சுகுமாரன் கழுத்தில் அரிவாள்மணையால் வெட்டப்பட்டும், தலையணையால் முகத்தில் அழுத்தியும் கொலை செய்திருப்பதற்கான அடையாளங்கள் தென்பட்டன.
மேலும் அவருடைய கழுத்தில் கிடந்த தங்க சங்கிலிகள், மோதிரம், பிரேஸ்லட் உள்ளிட்ட தங்க நகைகளும், பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. அவரது ஸ்கூட்டரையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணிக்குள் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் சுகுமாரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினம் அவருடன் வீட்டுக்கு வந்த வாலிபர்கள் தான் சுகுமாரனை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்தார்களா? அல்லது வேறு நபர்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீஸ் மோப்ப நாய் ஏஞ்சல் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் வரை ஓடி நின்றது. எனவே சுகுமாரனை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கொலை பணம்- நகைகளை கொள்ளையடிப்பதற்காக நடந்ததா? வட்டிக்கு பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சினையில் நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் நடந்ததா? என்பது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்மணை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.