9 முதல் 12-ம் வகுப்பு வரை 23-ந் தேதி பள்ளிகள் திறப்பு - மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவிப்பு

வரும் 23-ந் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.

Update: 2020-11-07 22:15 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பிரச்சினை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், பள்ளிகள் மூடியே உள்ளன. தற்போது ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் பள்ளிகளை மீண்டும் திறப்பது, 10, 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பிறகு வருகிற மே மாதத்திற்கு முன் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை நடத்த முடியாது என கூறினார். ஆனால் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

இந்தநிலையில் அவர் நேற்று பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தீபாவளி விடுமுறை முடிந்து வருகிற 23-ந் தேதி முதல் மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து பள்ளிகளை மீண்டும் திறப்பதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தினார். மேலும் அவர் கூறியதாவது:-

உலகில் மற்ற இடங்களில் உள்ள சூழலை பார்க்கும் போது, 2-வது கட்ட கொரோனா அலைக்கு வாய்ப்பு உள்ளது போல தெரிகிறது. எனவே நிர்வாகம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தீபாவளிக்கு பிறகு நாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட கூடாது. உள்ளூர் நிர்வாகம் வகுப்புகள் நடத்த மாற்று இடங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளிகளை சுத்தம் செய்வது, ஆசிரியர்களுக்கு கொரோனா சிகிச்சை செய்வது மற்றும் மற்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். மாணவர்களோ அல்லது அவர்களது வீட்டில் உள்ளவர்களோ உடல்நலம் பாதிக்கப்பட்டால் அந்த மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது.

இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.

மேலும் செய்திகள்