கயத்தாறு அருகே, ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்
கயத்தாறு அருகே ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது.
கயத்தாறு,
கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவில் அருகே கிராம மக்கள் வயல்வெளிக்கு செல்வதற்காக அரசு புறம்போக்கு இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினார். இதனால் அப்பகுதி வழியாக வயலுக்குச் செல்லும் விவசாயிகள், போலீசுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கும் பல்வேறு பலமுறை மனுக்கள் அனுப்பியும் இருந்தனர். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்தது. இதில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த இடத்தை கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தனர். பின்னர் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
இதேபோல் நாகலாபுரம் கிராமத்தில் குளத்திற்கு செல்லும் வண்டி பாதையையும் தனிநபர்கள் ஆக்கிரமித்து வைத்து இருந்தனர். இவற்றையும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார்கள். மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்த சம்பவத்தால் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர் அய்யப்பன், கிழக்கு இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதில் கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி பானுமதி, வருவாய் ஆய்வாளர் காசிராஜன், கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, பனைக்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெயா, துணை தலைவர் தமிழ்செல்வி, செயலர் முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.