இளம்பெண் புகாரை தொடர்ந்து நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு - 5 நாட்கள் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
இளம்பெண் புகாரை தொடர்ந்து நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் பல பெண்களுடன் நெருங்கி பழகி ஆபாச புகைப்படம் எடுத்ததாகவும், பின்னர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி சம்பந்தப்பட்ட பெண்களிடம் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் காசி மீது முதலில் புகார் அளித்தார். அதன்பிறகு நாகர்கோவிலை சேர்ந்த பெண் என்ஜினீயர் மற்றும் ஒரு சிறுமி என அடுத்தடுத்து காசி மீது புகார்கள் குவிந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில் காசி மீது அந்தந்த போலீஸ் நிலையங்களில் போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது கந்து வட்டி வழக்கும் பதிவானது. அந்த வகையில் மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காசிக்கு உதவியாக இருந்த டேசன் ஜினோ என்பவர் போலீசில் சிக்கினார். அவரையும் போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து காசி தொடர்பான அனைத்து வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் காசி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவற்றை போலீசார் சேகரித்து வைத்துக்கொண்டனர். மேலும் காசியை போலவே பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த தினேஷ் என்பரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து காசி மீது போடப்பட்டு இருந்த கந்துவட்டி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். தற்போது மீதமுள்ள வழக்குகளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக காசி மீது சென்னையை சேர்ந்த ஒரு இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். காசி தன்னுடன் பழகி நெருக்கமாக இருந்ததாகவும், பணத்தையும் பறித்ததாகவும் அந்த புகாரில் கூறியுள்ளார். அதன்பேரில் காசி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். காசி மீது ஏற்கனவே 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு வழக்கு பதிவாகி இருப்பதால் வழக்குகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது புகார் அளித்த பெண்ணுடன் காசிக்கு எவ்வாறு பழக்கம் ஏற்பட்டது? அவரிடம் இருந்து எவ்வளவு பணத்தை மிரட்டி பறித்தார்? என்ற விவரங்கள் சரிவர தெரியவில்லை. எனவே காசியை காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது காசியை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது.
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “காசி மீதான பாலியல் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் முக்கிய தகவல்கள் உள்ளன. எனவே அவற்றை சேகரிக்கும் பணிகள் நடக்கிறது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இதற்கிடையே காசி மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கு தொடர்பாக அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது“ என்றார்.