தோப்புத்துறையில் 744 பேருக்கு ரூ.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

தோப்புத்துறையில் 744 பேருக்கு ரூ.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

Update: 2020-11-07 05:54 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்திற்குட்பட்ட தோப்புத்துறை தனியார் திருமண மண்டபத்தில் 744 பேருக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் வரவேற்றார்.

இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு 744 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு, சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

நாகை மாவட்டத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா தமிழக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்களை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், ஒன்றியக்குழுத்தலைவர் கமலா அன்பழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார் முருகு உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தனி தாசில்தார் ரவி நன்றி கூறினார்.

இதேபோல காடந்தேத்தி கிராமத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் கட்டிதரப்பட்டுள்ள வீடுகளில் குடியேறியுள்ள மீள்குடிஅமர்த்தப்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பு முகாம் நடந்தது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் 110 நபர்களுக்கு வேலை உறுதிக்கான அட்டையினை வழங்கினார்.

மேலும் செய்திகள்