ரசிகர்களுக்காகவே தனி கட்சி நடிகர் விஜய்யுடன் எனக்கு எந்த மோதலும் இல்லை - டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

ரசிகர்களுக்கு அங்கீகாரம் அளிக்கவே தனி கட்சி ஆரம்பித்து உள்ளேன். நடிகர் விஜய்யுடன் எனக்கு எந்த மோதலும் இல்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

Update: 2020-11-06 22:15 GMT
சென்னை,

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்தது ஏன்?

பதில்:- நான் 25 வருடங்களுக்கு முன்பு விஜய் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்து பின்னர் அதை விஜய் நற்பணி மன்றமாக மாற்றினேன். எனக்கு சமூக உணர்வு அதிகம். எனது படங்கள் வாயிலாக அதை சொல்லி இருக்கிறேன். விஜய் நற்பணி மன்றம் மூலம் ரசிகர்கள் நிறைய நல்ல விஷயங்கள் செய்தனர். மக்களுக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் இந்த அமைப்பை மக்கள் இயக்கமாக மாற்றினேன். ரசிகர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் எனது பெயரில் தற்போது தேர்தல் கமிஷனில் கட்சியாக பதிவு செய்துள்ளோம்.

கேள்வி: நீங்கள் தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று விஜய் கூறியிருக்கிறாரே?

பதில்: ஆமாம். விஜய்க்கும் இந்த கட்சிக்கும் சம்மந்தமே இல்லை. இதை அவர் சொல்ல வேண்டாம். நானே சொல்லி விடுகிறேன். விஜய்க்கு மன்றம் ஆரம்பித்தபோது அவரிடம் கேட்டு ஆரம்பிக்கவில்லை. நான்தான் ஒரு ரசிகனாக ஆரம்பித்தேன். இன்றும் ஒரு நல்ல நடிகன் பெயரில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இதை செய்துள்ளேன்.

விஜய்யே கட்சி ஆரம்பித்து அவரே தலைவராக இருப்பாரா? எந்த கட்சியை அப்படி ஆரம்பித்து இருக்கிறார்கள். நானே சந்திரசேகர் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து நானே அதற்கு தலைவராக இருந்தால் வேடிக்கையாக இருக்கும் அல்லவா? இந்த இயக்கத்துக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை.

கேள்வி: கட்சிக்கு தனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்த கூடாது என்று விஜய் கூறியிருக்கிறாரே?

பதில்: ஒரு புதிய முயற்சி எடுக்கும்போது நல்லதை நினைத்துத்தான் போக வேண்டும். தானாகவே நல்லது நடக்கும். இன்று நான் எதிர்மறையாக சிந்தித்தால் எல்லாம் தவறாகத்தான் நடக்கும். இது ஒரு நல்ல தளம். இதில் வருகிறவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி: ரசிகர்கள் யாரும் உங்கள் கட்சியில் இணையக்கூடாது என்று விஜய் கூறி இருக்கிறாரே. அவரை சந்தித்து சமரசம் செய்வீர்களா?

பதில்: நானும் விஜய்யும் எதிரிகள் இல்லை. சமாதானப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். நாங்கள் இருவரும் அரசியல் பேசுவது இல்லையே தவிர வேறுவிரோதம் எதுவும் இல்லை. அப்பா-பிள்ளைதான்.

கேள்வி: உங்கள் கட்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுமா?

பதில்: 2 நாட்கள் கழித்து விரிவாக பேசுகிறேன்.

கேள்வி: விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டிய தேவை என்ன?

பதில்: எனக்கு தேவைப்பட்டது. நான் செய்துள்ளேன்.

கேள்வி: எனது பெயர் புகைப்படத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் எச்சரித்து இருக்கிறாரே?

பதில்: அது அவரது கருத்தாக சொல்லி இருக்கிறார்.

கேள்வி: விஜய்யும் நீங்களும் 5 ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறீர்கள் என்றும் இருவருக்கும் நல்ல உறவு இல்லை என்றும் பேசப்படுகிறதே? அது உண்மையா?

பதில்: அவரவர் கற்பனைகளுக்கு என்னால் விளக்கம் சொல்ல முடியாது. நாங்கள் கொரோனா நேரத்திலேயே இரண்டு மூன்று முறை பேசி இருக்கிறோம்.

கேள்வி: நீங்கள் கட்சி தொடங்கியது விஜய்க்கு தெரியுமா? தெரியாதா?

பதில்: தனக்கு தெரியாது என்று விஜய் சொல்லி இருக்கிறார். நான் அவரது பெயரில் 93-ல் ஆரம்பித்த அமைப்பு இது. இந்த அமைப்பில் உள்ள தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், அங்கீகாரத்தையும் கொடுக்க பதிவு செய்து இருக்கிறேன்.

கேள்வி: உங்கள் அரசியல் கட்சியின் இலக்கு என்ன?

பதில்: மெதுவாக சொல்கிறேன்.

கேள்வி: தற்போதையை அரசியல் சூழ்நிலையில் தனி கட்சி தேவையா?

பதில்: இப்போது என்னால் விரிவாக சொல்ல நேரம் இல்லை.

கேள்வி: தனது ரசிகர்கள் உங்கள் கட்சியில் சேர வேண்டாம் என்று விஜய் சொல்லி இருக்கிறார். நீங்கள் பதில் சொல்ல நேரம் இல்லை என்கிறீர்கள். இதை எப்படி புரிந்து கொள்வது?

பதில்: நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி: தொடக்கத்திலேயே உங்களுக்கு இது தடுமாற்றமாக இல்லையா?

பதில்: நல்லதை நினைத்து ஆரம்பித்து இருக்கிறேன். எல்லாம் நல்லதாக நடக்கும். இத்தனை ‘மைக்’குகள் முன்னால் எனக்கு பேசி பழக்கம் இல்லை. தனித்தனியாக வாருங்கள் பதில் சொல்கிறேன்.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

மேலும் செய்திகள்