வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.36½ லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் விமானத்தில் கடத்திய ரூ.36½ லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-11-06 22:15 GMT
பெங்களூரு, 

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆனால் எந்த போதைப்பொருட்களும் சிக்கவில்லை. இதற்கிடையில், ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த கூரியர் பார்சல்களை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த பார்சல்களில் பெண்கள் அணியும் செருப்புகள் இருந்தது. அவற்றை சோதனை செய்த போது போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது செருப்புகளில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான 241 கிராம் போதைப்பொருள் இருந்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் கூரியர் ஊழியர்கள் போல நடித்து, அந்த பார்சல்களில் இருந்த முகவரி மூலமாக பெங்களூரு உரமாவு அருகே வசிக்கும், 2 வாலிபர்களிடம் பார்சல்களை கொடுத்தனர். அந்த பார்சல்களை வாங்கிய வாலிபர்கள் போதைப்பொருட்கள் உள்ளதா? என்பதை பார்த்தார்கள். அப்போது அவர்கள் 2 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தார்கள். கைதான 2 பேர் மீதும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுபோன்று, வெளிநாட்டில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு கூரியர் மூலமாக வந்த பார்சலில் காதுகளில் வைக்கப்படும் பஞ்சுகளை சோதனை நடத்தினார்கள். அந்த பஞ்சுகளில் போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பஞ்சுகளில் 490 கிராம் போதைப்பொருட்கள் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.24½ லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்களை தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்