முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் மார்ஷல்களை தாக்கினால் கடும் நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை
முகக்கசவம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் மார்ஷல்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரித்துள்ளார்.;
பெங்களூரு,
பெங்களூரு டவுன்ஹாலில் மாநகராட்சி, பெங்களூரு போலீசார் சேர்ந்து கொரோனா தடுப்பு மற்றும் பயிற்சி குறித்த முகாம் நடைபெற்றது. இதில், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேசும் போது கூறியதாவது:-
பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சியும், அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து மாநகராட்சியின் மார்ஷல்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் முகக்கவசம் அணியாதவர்கள் அபராதம் கொடுக்க மறுத்துவிட்டு மார்ஷல்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகரில் ஒயிட்பீல்டு, இன்னும் சில பகுதிகளில் மார்ஷல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவங்கள் நடந்துள்ளது. இதனை பார்த்து கொண்டு போலீசார் சும்மா இருக்க மாட்டார்கள். இதனை சகித்து கொண்டும் போலீசார் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். மார்ஷல்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மார்ஷல்களுக்கு போலீசார் தரப்பில் இருந்து உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.
கொரோனாவை கட்டுப்படுத்த போலீசாருடன் இணைந்து மார்ஷல்களும் பணியாற்றி வருகின்றனர். மார்ஷல்களின் பணி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் 120 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க மாநகராட்சியுடன் இணைந்து போலீசார் பணியாற்றுகின்றனர். புதிதாக ஏதாவது ஒரு சட்டத்தை அமல்படுத்தும் போது மக்களிடையே எதிர்ப்பு இருக்க தான் செய்யும்.
கொரோனாவில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக்கவசம் அணியாதவர்களிடம் சட்டப்படி அபராதம் வசூலிக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். இன்னும் 3 மாதங்கள் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.