மக்கள் நிதி நெருக்கடியில் இருப்பதால் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம்
மக்கள் நிதி நெருக்கடியில் இருப்பதால் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-;
பெங்களூரு,
கர்நாடகத்தில் மின் கட்டணம் கடந்த 1-ந் தேதி முதல் உயர்த்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் உற்பத்தித்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மக்கள் வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர். மக்களிடம் பணம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. மின் கட்டண உயர்வு மற்றும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின் கட்டணம், பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் அதிகளவில் பொருட்களை வாங்குவார்கள். இதனால் பொருளாதாரம் புத்துணர்ச்சி பெறும். ஆனால் இதற்காக மாறாக மாநில அரசு செயல்பட்டுள்ளது. மின் கட்டணம் சராசரியாக 17.15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 150 மில்லியன் யூனிட் முதல் 200 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது.
மின் உற்பத்தியில் கர்நாடகம் தன்னிறைவு அடைந்துள்ளது. 40 முதல் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டது. அதன் விளைவாக அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ராய்ச்சூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தியை மாநில அரசு நிறுத்தியுள்ளது. மத்திய அரசிடம் இருந்த யூனிட்டுக்கு 50 பைசா கூடுதலாக கொடுத்து அரசு மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது.
இதனால் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. பெஸ்காம் நிறுவனத்திற்கு கர்நாடக அரசு ரூ.3,361 கோடி வழங்க வேண்டியுள்ளது. இந்த ஆண்டு மாநிலத்தில் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. சூரியசக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரத்தை பெற்று மக்களுக்கு வினியோகிக்க வேண்டும். இதனால் மாநில அரசுக்கு ரூ.6,000 கோடி மிச்சமாகும். கொரோனா பரவல் காரணமாக மக்கள் நிதி நெருக்கடியில் இருப்பதால் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.