மோட்டார் சைக்கிள் மோதி பலியான அரசு பஸ் டிரைவரின் குடும்பத்துக்கு ரூ.35½ லட்சம் இழப்பீடு - விபத்தை ஏற்படுத்தியவர் வழங்க தீர்ப்பாயம் உத்தரவு
மோட்டார் சைக்கிள் மோதி பலியான அரசு பஸ் டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.35 லட்சத்து 57 ஆயிரம் இழப்பீட்டை, விபத்தை ஏற்படுத்தியவர் வழங்கும்படி மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
தானே,
மராட்டிய அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தவர் மங்கள் பாட்டீல்(வயது49). இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தானே தின்ஹாத் நாக்கா நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்தமோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மங்கள் பாட்டீல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்
இதையடுத்து நவ்பாடா போலீசார் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய குருமித் சிங் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மங்கள் பாட்டீலின் உறவினர் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது. இந்த விசாரணையில் குருமித் சிங் அதிவேகமாகவும், அலட்சியமாகவும் மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மங்கள் பாட்டீலின் குடும்பத்துக்கு குருமித் சிங் ரூ.35 லட்சத்து 57 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.