நெல்லை கொள்ளை வழக்கில் கைது: பகலில் போலீஸ்காரர்; இரவில் பலே திருடன் - ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக பரபரப்பு தகவல்

நெல்லையில் கொள்ளை வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவர் பகலில் போலீஸ்காரராகவும், இரவில் பலே திருடனாகவும் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Update: 2020-11-06 22:00 GMT
நெல்லை,

நெல்லை மாநகரின் விரிவாக்க பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெருமாள்புரத்தை சேர்ந்த தங்கதுரை (வயது 39) என்பவரது வீட்டில் மர்மநபர்கள் புகுந்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து தங்கதுரை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கொள்ளை கும்பலின் தடயங்களை சேகரித்தனர். அப்போது கிடைத்த கைரேகை பதிவுகளை, ஏற்கனவே கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.

அப்போது தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் கற்குவேல் என்பவருடைய கைரேகையுடன் அது சரியாக பொருந்தியது.

இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கற்குவேல் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் அவரது நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை நெல்லை மற்றும் தூத்துக்குடி தனிப்படை போலீஸ் குழுவினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது கற்குவேல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததை உறுதி செய்தனர்.

இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு கற்குவேலை தென்காசி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அவர் பணிக்கு செல்லாமல் தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்திலேயே தங்கி இருந்தார்.இந்த நிலையில் நெல்லை மாநகர தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்துக்கு சென்றனர். அங்கிருந்த கற்குவேலை பிடித்து கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர்.

அவரை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-

கற்குவேல் கடந்த 2015-ம் ஆண்டு இளைஞர் காவல் படையில் சேர்ந்தார். அதன்பிறகு 2017-ம் ஆண்டு போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் டெல்லி பட்டாலியனில் பயிற்சிக்கு சேர்ந்தார். பயிற்சி முடிந்த பிறகு திருச்செந்தூர் போலீஸ் நிலையத்திலும், அதைத்தொடர்ந்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்திலும் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் ஆன்லைன் சீட்டு விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டு விளையாடியதால், கற்குவேல் பல லட்சம் ரூபாயை இழந்தார். வீடு கட்டுவதற்கு ரூ.30 லட்சம் வரை குடும்பத்தில் சேமித்து வைத்திருந்ததாகவும், அதனை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை ஈடுகட்ட கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால் பகலில் போலீஸ்காரராகவும், இரவில் பலே திருடனாகவும் செயல்பட்டு வந்து உள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

கைதான கற்குவேலிடம் இருந்து 15 பவுன் நகைகள், 1 கார், 1 மோட்டார் சைக்கிள், 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கற்குவேலின் கூட்டாளி மோகன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லை, தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்