படவேடு சாலையில் சுமைதாங்கி கல்வெட்டு கண்டுபிடிப்பு

படவேடு சாலையில் 200 ஆண்டுகள் பழமையான சுமைதாங்கி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-11-06 15:58 GMT
கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்திலிருந்து படவேடு செல்லும் சாலையில் அனந்தபுரம் -வாழியூர் கூட்டுரோட்டில் உள்ள புளிய மரத்தின் அடியில் 4 கருங்கல் பலகைகள் போடப்பட்டு, அதில் அப்பகுதி மக்கள் அவ்வப்போது தாயம் ஆடுவதும், சிலர் அதில் அமர்ந்து சீட்டு ஏலம் விடுவதும் வழக்கம். இந்த நிலையில் படவேட்டைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் அமல்ராஜ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன், அங்கிருந்த கருங்கல் பலகையை ஆய்வு செய்தபோது, அந்த கருங்கல் பலகைகள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக அமைக்கப்பட்ட சுமைதாங்கி கற்கள் என்பது தெரியவந்தது. இது குறித்து அவர் கூறியதாவது:-

சுமைதாங்கி கல்லமைப்பது தமிழர் வாழ்வில் ஒரு அறச்செயலாக கருதப்பட்டுள்ளது. கர்ப்பமுற்ற பெண்கள் இறந்துபோனால் அவர்களின் நினைவாக பல இடங்களில் சுமைதாங்கி கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் படவேடு செல்லும் சாலையில் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே, காளசமுத்திரம் கிராமத்திற்கு செல்லும் வழியில் புளியமரத்தடியின் கீழ் நான்கு பட்டைக் கற்கள் காணப்படுகின்றன.

இதில் மேற்குப்புறம் உள்ள கல்லில் மன்மத ஆண்டு, ஆனி மாதம் 21-ந் தேதி வாழியூர் கிராமத்தைச் சார்ந்த பூசால குமாரன் (மகன்) வறதன் (வரதன்) இறந்ததற்காக அவர் தருமம் பெற வேண்டி அறச்செயலுக்காக இந்த சுமைதாங்கி கல் வைக்கப்பட்டுள்ளது. அக்கல்லில் மனம, தரூல, ஆனிமீ, உகவாழி, யூர்பூசால, வறதன் குமாறன் பெறுமா தறுமம் என பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்காலத்தில் சுமைதாங்கி கல் அமைப்பது தரும காரிய செயல் என்பது தெரியவருகிறது என்றார்.

மேலும் செய்திகள்