சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் முதல்-அமைச்சர் விரைவில் முடிவெடுப்பார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் முதல்-அமைச்சர் விரைவில் முடிவெடுப்பார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2020-11-06 15:32 GMT
மதுரை,

மதுரையில் கொரோனா நோயாளிகளுக்காக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் 125 நாட்களாக நடைபெறும் அம்மா கிச்சனை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் அளவு, அதில் சேர்க்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி பொருட்கள், அதனால் நோயாளிகளுக்கு எந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது என்பதை கேட்டறிந்தார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் விசாகன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் ஆர்.பி..உதயகுமார் கூறியதாவது.

மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு நிவாரணங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். அரசுப்பள்ளி மாணவர்களின் வாழ்வில் முதல்-அமைச்சர் ஒளியேற்றியவர். மருத்துவ படிப்பவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இந்தியாவில் எந்தவொரு முதல்-அமைச்சருக்கும் உதிக்காத சிந்தனையை முதல்வர் நிறைவேற்றி உள்ளார். தமிழக அரசு சிறந்த நிர்வாகத்தை செய்தமைக்கு கஸ்தூரிரங்கன் பாராட்டி உள்ளார். சென்னைக்கு அடுத்த நிலையில் மதுரை என்கிற இடத்தில் கொரோனா தொற்று இருந்தது. சிறந்த நடவடிக்கையால் மதுரையில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்குவதற்காக தொடங்கப்பட்ட அம்மா கிச்சன் 125 நாட்களை எட்டியுள்ளது. அம்மா கிச்சனில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவால் 96 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். மதுரையில் 20 சதவீதமாக இருந்த கொரோனா தொற்று பரவல் 1.62 சதவீதமாக குறைந்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது போலவே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்ய முதல்வர் முடிவெடுப்பார்.

தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்களை தி.மு.க. தலைவர் பார்க்க வேண்டும். அந்த வளர்ச்சி திட்டங்களில் குறை இருந்தால் தி.மு.க. தலைவர் சொல்லலாம். ஆனால் ஸ்டாலின் ஒரே நோக்கத்தில் மட்டுமே செயல்படுகிறார். அவர் தமிழகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக தி.மு.க. தலைவர் காணொளி காட்சி வழியே திருமணத்தை நடத்தி வைக்கிறார். ஆனால் முதல்வர் எதற்கும் அஞ்சாமல் மக்களை சந்தித்து வருகிறார். தி.மு.க. தலைவர் ஆயிரம் அறிக்கையை வெளியிட்டாலும் முதல்வரின் உழைப்பை மறைக்க முடியாது. தமிழக மக்களுக்கு நலன் சார்ந்தே முடிவுகளை முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்