உடுமலை அருகே வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி

உடுமலை கல்லாபுரம் அருகே வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார்.

Update: 2020-11-06 11:49 GMT
தளி,

திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இதுபோல் நேற்று மாலையும் திருப்பூரில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல பகுதியில் மின்தடை ஏற்பட்டது. நேற்று காலை 7 மணி வரை பதிவான மழை அளவு விவரம் வருமாறு:-

திருப்பூர் வடக்கு பகுதியில் 11 மில்லி மீட்டரும், அவினாசியில் 56 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 12 மில்லி மீட்டரும், ஊத்துக்குளியில் 21.60 மில்லி மீட்டரும், காங்கேயத்தில் 60 மில்லி மீட்டரும், தாராபுரத்தில் 165 மில்லி மீட்டரும், மூலனூரில் 135 மில்லி மீட்டரும், குண்டடத்தில் 15 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணை பகுதியில் 22 மில்லி மீட்டரும், அமராவதி அணைப்பகுதியில் 38 மில்லி மீட்டரும், உடுமலையில் 20 மில்லி மீட்டரும், மடத்துக்குளத்தில் 8 மில்லி மீட்டரும், திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதியில் 16 மில்லி மீட்டரும், வெள்ளகோவிலில் 84 மில்லி மீட்டரும், திருப்பூர் தெற்கு பகுதியில் 23 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கல்லாபுரம் வடக்குவீதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 80). இவர் தனது உறவினரான நாகராஜ் என்பவருடன் அந்த பகுதியில் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக அமராவதி, கல்லாபுரம் பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் மாரியம்மாள் குடியிருந்த வீடு மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்து விட்டது.

இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அமராவதி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் மாரியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீடு இடிந்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்