கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட மாவோயிஸ்டு உடல் பெரியகுளம் மயானத்தில் தகனம் - மத்திய அரசுக்கு எதிராக ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு

கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட மாவோயிஸ்டு உடல் பெரியகுளம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவருடைய ஆதரவாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-06 10:28 GMT
பெரியகுளம்,

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆயுத பயிற்சியில் ஈடுபட முயன்ற மாவோயிஸ்டுகள் வேல்முருகன், முத்துச்செல்வம், பழனிவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பயிற்சியில் ஈடுபட்ட 8 பேர் தப்பி ஓடிவிட்ட நிலையில் சுந்தரமூர்த்தி, கார்த்திக், ஈஸ்வரன், பாலகிருஷ்ணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வந்தனர். அப்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு பெரியகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு வேல்முருகன், பழனிவேல் உள்பட சிலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜாமீனில் சென்ற வேல்முருகன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மீன்முட்டி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் வேல்முருகன் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் 5 பேர் குண்டு காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில் இறந்த வேல்முருகனின் உடலை கைப்பற்றி கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடலை தமிழக எல்லையான பொள்ளாச்சி அருகே உள்ள கோபாபுரம் சோதனை சாவடியில் தமிழக போலீசாரிடம் நேற்று முன்தினம் கேரள போலீசார் ஒப்படைத்தனர். தமிழக போலீசாரின் பாதுகாப்புடன் வேல்முருகனின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் உறவினர்கள் முன்னிலையில் நேற்று அதிகாலையில் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் வேல்முருகனின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவருடைய ஆதரவாளர்கள் கேரள அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். முன்னதாக வேல்முருகனின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையொட்டி அப்பகுதியில் கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சங்கரன், பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பெரியகுளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்