தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல்யாத்திரை நடக்கும் - எல்.முருகன்
வேல்யாத்திரைக்காக திருத்தணி நோக்கி சென்ற பாஜகவினர் வாகனங்கள் திருவள்ளூர் அருகே தடுத்து நிறுத்தப்பட்டது.;
திருவள்ளூர்,
தமிழக பாஜக சார்பில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை ‛வேல் யாத்திரை' நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா பரவலுக்கான அச்சுறுத்தல் காரணமாக வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. மேலும், ‛வேல் யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்குப் பின் வழக்கு தொடரலாம்,' எனக்கூறி நீதிமன்றம் இவ்வழக்கை முடித்து வைத்தது.
இந்தநிலையில், தடையை மீறி வேல் யாத்திரையை துவக்க கையில் வேலுடன் கோயம்பேட்டில் இருந்து எல்.முருகன் கிளம்பினார். இவருடன் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா மற்றும் தொண்டர்கள் படை சூழ காரில் அணிவகுத்து சென்றார்.
யாத்திரை குறித்து எல்.முருகன் கூறுகையில், கடவுளை வழிபடுவது எனது அடிப்படை உரிமை. அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன். கடவுள் முருகனின் துணைக்கொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையை தொடங்குகிறோம் எனக்கூறினார்.
இந்நிலையில் பாஜகவின் வேல் யாத்திரை நசரத்பேட்டையை சென்றடைந்தது. உடனே அங்கிருந்த காவல்துறையினர் திருத்தணி நோக்கி செல்ல அனைத்து வாகனங்களுக்கும் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர். திருத்தணி நோக்கி செல்ல எல்.முருகனுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
முன்னதாக எல்.முருகன் கூறுகையில், தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல்யாத்திரை நடக்கும் என்றார்.