கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட தியேட்டர்கள் சுத்தப்படுத்துதல், கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட தியேட்டர்கள் சுத்தப்படுத்தும் பணி மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 7 மாதங்களுக்குப்பிறகு 10-ந்தேதி தியேட்டர்கள் திறக்கப்படுகிறது.;

Update: 2020-11-06 05:29 GMT
தஞ்சாவூர்,

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இன்னும் மக்கள் கொரோனா அச்சத்தால் தான் வாழ்ந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு, மரணங்கள் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளும் ஊரடங்கில் பல்வேறு கட்ட தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடைகளும் இரவு 10 மணி வரை திறக்கப்பட்டுள்ளன.

தியேட்டர்கள் திறப்பு

இந்த நிலையில் ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் மூடப்பட்டன. கடந்த 7 மாத காலமாக தியேட்டர்கள் மூடியே கிடக்கின்றன. இதனால் தியேட்டரில் வேலை பார்த்த ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். தியேட்டர் உரிமையாளர்களுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டது. தியேட்டரில் வேலை பார்த்த ஊழியர்கள் காய்கறி கடை, மீன் விற்பனை, ஆட்டோ ஓட்டுவது போன்ற தொழில்களை செய்து குடும்பங்களை காப்பாற்றி வந்தனர்.

இதையடுத்து தமிழகத்தில் தியேட்டர்கள் இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழக அரசு வருகிற 10-ந்தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி வருகிற 10-ந்தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன.

சுத்தப்படுத்தும் பணி

இதையடுத்து தியேட்டர்கள் சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தஞ்சை மாநகரில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 24 தியேட்டர்கள் உள்ளன. தியேட்டர்கள் திறக்கப்படாமல் கிடந்ததால் சுத்தம் இன்றி காணப்பட்டன. இந்த நிலையில் இருக்கைகளை சுத்தம் செய்வது, தரையை சுத்தம் செய்வது போன்ற பணிகளை ஊழியர்கள் நேற்று முதல் மேற்கொண்டு வருகிறார்கள். தஞ்சையில் உள்ள சாந்தி, கமலா திரையரங்குகளில் 10-க்கும் மேற்பட்டவர்கள் இந்த பணிகளை மேற்கொண்டனர்.

இது குறித்து தியேட்டர் மேலாளர் தாமரைச்செல்வன் கூறுகையில், “10-ந்தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து தியேட்டர்கள் சுத்தப்படுத்தவது, கிருமிநாசினி தெளிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கழிவறைகளும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. 7 மாதமாக திரைப்படங்கள் திரையிடப்படாததால் கருவிகள் முறையாக உள்ளதா? படங்கள் தெளிவாக உள்ளதா? எனவும் திரையிடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது”என்றார்.

மேலும் செய்திகள்