ஊரடங்கின்போது மதுபானம் விற்பனை: புதுவை கலால் துறை அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை
புதுச்சேரியில் ஊரடங்கு காலத்தில் மதுபானம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கலால்துறை அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.
புதுச்சேரி,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதுவையில் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்த காலகட்டத்தில் சில மதுக்கடைகள், சாராயக்கடைகளில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக கவர்னர் மாளிகைக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து கவர்னர் கிரண்பெடி, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இந்த குழு நடத்திய விசாரணையில் புதுவையில் 100-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு திருட்டுத்தனமாக மது வகைகளை விற்பனை செய்தது உறுதியானது.
இதுதொடர்பாக அந்த மதுக்கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதுடன் தற்காலிகமாக உரிமமும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
சி.பி.ஐ. அதிரடி சோதனை
இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சி.பி.ஐ.க்கு கவர்னர் கிரண்பெடி பரிந்துரை செய்தார். அதன்படி சென்னையில் இருந்து சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று புதுவைக்கு வந்தனர். மாலை 4 மணி முதல் தட்டாஞ்சாவடியில் உள்ள கலால்துறை அலுவலகத்தில் அவர்கள் திடீர் சோதனை நடத்தினார்கள். இது இரவு 8 மணிக்குப் பிறகும் நீடித்தது.
அப்போது புதுவையில் ஊரடங்கு காலத்தின்போது தடையை மீறி திருட்டுத் தனமாக மதுபானம் விற்றதாக சீல் வைக்கப்பட்ட மதுக்கடைகளின் விவரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
கலால் துறை அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.