நல்லவாடு கடற்கரையில் பிணமாக கிடந்த பெண் கொலை செய்யப்பட்டது அம்பலம் கரும்பு வெட்டும் தொழிலாளி கைது

நல்லவாடு கடற்கரையில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இது தொடர்பாக போலீசார் தொழிலாளியை கைது செய்தனர்.

Update: 2020-11-06 03:57 GMT
பாகூர்,

புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்துள்ள நல்லவாடு கடற்கரை பகுதியில் கடந்த 1-ந் தேதி காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். அவரது ஆடைகள் அலங்கோலமாக இருந்தன. இதுபற்றி தகவல் அறிந்து தவளக்குப்பம் போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார், பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.

இதில், பிணமாக கிடந்த பெண் கோர்க்காடு ஏரிக்கரை வீதியை சேர்ந்த சாந்தி(வயது 45) என்பதும் பிரேத பரிசோதனை முடிவில் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி விசாரணையை போலீசார் துரிதப்படுத்தினர்.

கரும்பு வெட்டும் தொழிலாளி

சம்பவத்தன்று சாந்தியுடன், கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபுசமுத்திரம் பகுதியை சேர்ந்த பூபாலன்(48) என்பவர் இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் சாந்தியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பூபாலன் கைது செய்யப்பட்டார்.

சாந்தியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசில் பூபாலன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நான் கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்தேன். அப்போது எனக்கு சாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் கணவன்-மனைவியாகவே வாழ்ந்து வந்தோம். 2 பேருக்குமே மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கரும்பு வெட்டும் தொழில் இல்லாத நேரத்தில் நல்லவாடு வீராம்பட்டினம் பகுதியில் உள்ள சாராய கடைக்கு அருகில் கிடக்கும் பாட்டில்களையும், பாலித்தீன் பைகளையும் சேகரித்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து சாப்பிட்டு வந்தோம்.

கருத்து வேறுபாடு

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தியுடன் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே நான் கரும்பு வெட்ட வேறு மாநிலத்திற்கு சென்று விட்டேன். இதற்கிடையே சாந்திக்கு திருவண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் புதுவை திரும்பினேன். அதன்பின் சாந்தியை சந்தித்து என்னுடன் வாழ வரும்படி கூறினேன். அவரும் ஆறுமுகத்தை விட்டு விட்டு என்னுடன் வந்து விட்டார்.

சம்பவத்தன்று இரவு நல்லவாடு பகுதியில் உள்ள சாராயக் கடையில் சாராயம் வாங்கி 2 பேரும் குடித்தோம். பின்னர் அங்குள்ள கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது சாந்தி என்னிடம் ஆறுமுகத்தை பற்றி உயர்வாகப் பேசினார். இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அவரை தாக்கினேன். அவர் மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி விழுந்தார். அவரைப் பார்த்த போது உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் பயந்து போன நான் எனது சொந்த ஊரான சின்னபாபு சமுத்திரத்திற்கு சென்று விட்டேன். அங்கு பதுங்கி இருந்த என்னை போலீசார் கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பூபாலனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்