வீட்டில் தனியாக இருந்த பெண், குழந்தைகளை மிரட்டி ரூ.5 லட்சம் கொள்ளை 2 பேருக்கு வலைவீச்சு
வீட்டில் தனியாக இருந்த பெண் மற்றும் குழந்தைகளை மிரட்டி வீட்டில் இருந்த ரூ.5 லட்சத்தை கொள்ளை அடித்த 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
வசாய்,
தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சேர்ந்தவர் ராம்பிரகாஷ். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு 9, 8 மற்றும் 1 வயதுடைய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ராம்பிரகாஷ் தற்போது குடும்பத்துடன் செக்டார் நம்பர் 2-ல் பாயல் கோஆபரேடிவ் ஹவுசிங் சொசைட்டியில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை சுனிதா குழந்தைகளுடன் வெளியே சென்றிருந்தார். பின்னர் 5.30 மணி அளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது 2 பேர் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
ரூ.5 லட்சம் கொள்ளை
இதற்கிடையே வீட்டின் உள்ளே சுனிதா மற்றும் குழந்தைகள் வந்ததை கண்ட கொள்ளையர்கள் அவர்களை கழிவறையில் தள்ளி கதவை வெளியே பூட்டினர். இதனால் அவர்கள் கழிவறைக்குள் இருந்தவாறு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என சத்தம்போட்டனர். இதனால் பயந்துபோன கொள்ளையர்கள் கழிவறையை திறந்து சத்தம்போட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டி படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் வீட்டில் இருந்த ரூ.5 லட்சத்தை கொள்ளை அடித்துவிட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதையடுத்து சுனிதா நடந்த சம்பவத்தை கணவருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நயாநகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.