அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரியலூர்,
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று முடிந்தது. அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களை இணைக்கும் இந்த பாலம் 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
ஆனால், மேம்பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை (சர்வீஸ் ரோடு) அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. அணுகு சாலை அமைக்க மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டது. இதற்காக சாலை அமைய உள்ள இடத்தில் இருந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டு மாற்று இடத்தில் நடப்பட்டன. அதன்பிறகும் அணு சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை.
வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
அணுகு சாலை அமைக்கப்படாததால் ரெயில் நிலையத்திற்கும், மருத்துவமனைக்கும் செல்ல வாகன ஓட்டிகள் இடதுபுறம் குறுகிய மண்பாதையில் சிரமப்பட்டு தான் சென்று வருகின்றனர். மேலும், பல்வேறு காரணங்களால் இறந்தவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உடலை எடுத்து செல்லும் பாதை முட்புதர்கள் மண்டிக்கிடப்பதால் உறவினர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அணுகு சாலை ஏன் இன்னும் அமைக்கப்படவில்லை என்று தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டால் கட்டிட உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். அதனால் சாலை அமைக்க முடியவில்லை என்று கூறுகின்றனர். ஆகவே, சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்கி சாலை பணியை உடனே தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.