நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் பலி

திருவொற்றியூரில் நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலியானார்.;

Update: 2020-11-05 22:30 GMT
திருவொற்றியூர், 

சென்னை திருவொற்றியூர் ராஜா சண்முகநகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் ராகுல் (வயது 19). இவர், திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மதியம் 1.30 மணிவரை கல்லூரி ஆன்-லைன் வகுப்பில் கலந்து கொண்ட ராகுல், பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து திருவொற்றியூர் காசிகோவில்குப்பம் அருகே கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று தோன்றிய ராட்சத அலை ராகுலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். அதற்குள் கடல் அலை ராகுலை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.

மாணவர்களின் சத்தம்கேட்டு ஓடிவந்த அப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் சென்று தேடினர். அதற்குள் ராகுல், ராட்சத அலையில் சிக்கி பலியாகிவிட்டார். அவரது உடலை மீனவர்கள் கரைக்கு இழுத்து வந்தனர். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்