சீரான மின்சாரம் வழங்கக்கோரி மின்வாரிய அலுவலகம் முற்றுகை
சீரான மின்சாரம் வழங்கக்கோரி மின்வாரிய அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.;
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் ஊராட்சியை சேர்ந்த மடவிளாகம், மடவிளாகம் காலனி, அண்ணாநகர் இருளர் காலனி போன்ற பகுதிகளில் இரவு, பகல் என்று மின்வெட்டு தொடர்கதையாக உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கன்னிகைபேர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தடையில்லா மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷமிட்டனர். தகவலறிந்த மின்வாரிய கோட்ட பொறியாளர் பாலச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், திருக்கண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட 3 பகுதிகளுக்கும் தனித்தனியே டிரான்ஸ்பார்மர் அமைத்து தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். மேலும், இந்த பணிகளை முடிக்க 3 மாத காலம் அவகாசம் வழங்கும்படி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்காமல் பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதன் பின்னர், கோட்ட பொறியாளர் 3 மாதத்தில் பணியை முடித்து கொடுப்பதாக தனது கைப்பட உறுதி மொழியை எழுதி கொடுத்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.