பெரணமல்லூர் அருகே கொரோனா நிதி வாங்கி தருவதாக பண வசூலில் ஈடுபட்டு மோசடி 2 பேர் கைது

பெரணமல்லூர் அருகே கொரோனா நிதி வாங்கித்தருவதாக கூறி பணவசூலில் ஈடுபட்டு மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-11-05 16:33 GMT
சேத்துப்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த திருமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 71) விவசாயி. இவரும் ஆரணி பகுதியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி கண்ணனும் (41) பெரணமல்லூர் பகுதி கிராமங்களில் பல்வேறு நபர்களிடம் கொரோனா சிறப்பு நிதி பெற்றுத் தருவதாக கூறி வந்தனர். இதை உண்மையென நம்பியவர்கள் தங்களுக்கு கொரோனா நிதி வாங்கித்தரும்படி கூறியுள்ளனர்.

இவ்வாறு நம்பி வந்த 15-க்கும் மேற்பட்டோரிடம் முன்கூட்டியே கமிஷன் தர வேண்டும் என கூறி ரூ.500, ரூ.1000, ரூ.2 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என 2 பேரும் வசூல் செய்தனர்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாகியும் கொரோனா சிறப்பு நிதி பெற்றுத் தராததால் பணம் கொடுத்தவர்கள் சம்பத் மற்றும் கண்ணனிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அவர்கள் கொரோனா நிதி விரைவில் வந்து விடும் என கூறி வந்தனர். பல நாட்களாகியும் பணம் கிடைக்காதவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் நடுபட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநீலகண்டன் என்பவர் தன்னிடம் சம்பத் மற்றும் கண்ணன் ஆகியோர் கொரோனா நிதி பெற்றுத்தருவதாக கூறி ரூ.70 ஆயிரத்தை மோசடி செய்து விட்டதாக கூறி பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பத், கண்ணன் ஆகியோர் மீது பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் இருவரும் கொரோனா சிறப்பு பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்து செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்