தடை இல்லாமல் பட்டாசு விற்பனை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் முத்தரசன் கோரிக்கை

தடை இல்லாமல் பட்டாசு விற்பனை நடைபெற மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-11-05 15:17 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ஞானசீலன் 2-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டபம் யூனியன் முன்னாள் துணைத்தலைவர் ஆரோக்கியநாதன் வரவேற்றார். கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகபூபதி முன்னிலை வகித்தார். தொடர்ந்து ஞானசேகரனின் உருவப்படத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பல்வேறு சமுதாய தலைவர்கள் முக்கியஸ்தர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

அப்போது கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய தமிழக ஆளுநரிடம் தமிழக முதல்-அமைச்சர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மீன் பிடிக்கச் செல்லும் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீது பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இலங்கை அரசோடு பேசி மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முழுமையாக குறையவில்லை. இப்படி இருக்கும் சமயத்தில் பள்ளிகளை திறப்பது என்பது சரியான தருணம் அல்ல இது. தமிழகத்தில் பா.ஜனதா கட்சியால் ஒருபோதும் காலூன்ற முடியாது.

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த பட்டாசு தொழிற்சாலையை நம்பி சுமார் 6 லட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் தீபாவளி பண்டிகைக்காக நாள் முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நினைவுதின நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, ம.தி.மு.க. கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பேட்ரிக், ராமேசுவரம் தாலுகா செயலாளர் முருகானந்தம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்வேல், அ.தி.மு.க. கட்சியின் மாவட்ட மீனவர் அணி செயலாளர் எம்.எஸ்.அருள் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ்.பி. ராயப்பன், ஜமாத் நிர்வாகி பஷீர் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்ட பல்வேறு சமுதாய தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்