சிறுத்தைப்புலி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: தனியார் தேயிலை தோட்டத்தில் துப்பாக்கி கண்டெடுப்பு

சிறுத்தைப்புலியை சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தனியார் எஸ்டேட்டில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-11-05 14:54 GMT
பந்தலூர்,

கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட அத்திக்குன்னா தனியார் எஸ்டேட்டில் கடந்த மாதம் 27-ம் தேதி சிறுத்தைப்புலி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது. இது குறித்து தேவாலா போலீசார், வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பந்தலூர் பகுதியில் துப்பாக்கி லைசென்ஸ் பெற்றவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

குற்றவாளிகள் குறித்த தடயங்கள் எதுவும் கிடைக்காததால் சத்தியமங்கலத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. இதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வனத்துறையினரும் அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தைப்புலி எந்த பகுதியில் நடமாடியது மற்றும் அதன் வாழ்விடம் குறித்து ஆய்வு நடத்தினர்.

இந்த நிலையில் அத்திக்குன்னா தனியார் எஸ்டேட்டில் வனத்துறையினர் நேற்று மீண்டும் கள ஆய்வு நடத்தினர். அப்போது தனியார் தேயிலை தோட்ட மேலாளர் தங்குமிடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள சில்வர் ஓக் மரங்கள் இருந்த பகுதியில் வனத்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு சாக்குப்பையில் இரட்டை குழல் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த வனத்துறையினர் அங்கிருந்த வீட்டை ஆய்வு செய்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த வீட்டை சீல் வைத்தனர்.

இது குறித்து கூடலூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் விஜயன் கூறும்போது, அத்திக்குன்னா தனியார் எஸ்டேட்டில் மரங்களுக்கிடையே மறைத்து வைத்திருந்த துப்பாக்கி தொடர்பாக எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை செய்ய முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அவர் அங்கு இல்லை. அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு உள்ளது. எனவேதான் அவருடைய வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. அவரை பிடித்தபின்னர்தான், முழு தகவலும் கிடைக்கும் என்றார்.

மேலும் செய்திகள்